Pages

Wednesday, June 24, 2015

இறால் பண்ணையும்... இயற்கை சீரழிவும்!


ண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக கடல், நிலம், உப்பு வளத்தை விற்று ( அழித்து ) செயற்கை இறால்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது மரக்காணம் கடற்கரை. அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில், மீன் வகையை சேர்ந்த இறாலுக்கு முக்கிய இடம் உண்டு. 

சிறுவர் முதற்கொண்டு இறாலை விரும்பி உண்ணுவதற்கு அதன் வடிவமும், நிறமும், தனிச்சுவையும்தான் காரணம். உள்நாட்டு விற்பனை மட்டுமின்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படு வதன் மூலமும், பெரும் அந்நிய செலாவணியை இறால் ஈட்டித் தந்துக்கொண்டிருக்குறது. தமிழகத்தில் இறால் உற்பத்தியில் மரக்காணம் முதலிடத்தில் இருக்கிறது. 

இந்த பெருமை ஒருபக்கம் இருந்தாலும், இறாலால் மரக்காணம் இழந்ததுதான் அதிகம். இறாலுக்கான தீனி என்பதுபோல, மரக் காணத்தின் கடல்வளத்தையும், விவசாய வளத்தையும் இறால் பண்ணைகள் கொஞ்சம் கொஞ்சமாக தின்று அழித்து வருகின்றன. 

மரக்காணத்தில் மொத்தம் 1400 இறால் பண்ணைகளும், 30 இறால் குஞ்சு பொறிப்பகங்களும் இயங்கி வருகின்றன. இந்த இறால் பண்ணைகளால் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை அறிய நேர்ந்தால் ஒருவேளை நீங்கள் இறால் சாப்பிடுவதையே நிறுத்திவிட நேரிடும். 

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கடற்கரையை ஒட்டிய சதுப்பு நிலத்தில், இயற்கையாக கிடைக்கும் இறால்களை பிடித்து மீனவர்கள் விற்பனை செய்து வந்தார்கள். உலக அளவில் வெள்ளை இறால்களின் தேவை அதிகரிக்க, அதைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட தொழிலதிபர்கள், செயற்கை இறால் பண்ணைகளை துவங்கினர்.
செயற்கை பண்ணையில் வளரும் இறால் வேகமாக வளர உப்பு நீர், நல்ல நீர், மண் வளம், காற்றோட்டம் ஆகியவை அத்யாவசியம். 1050 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டுள்ள மரக்காணம், தமிழகத்தில் செயற்கை இறால் வளர ஏற்ற இடம் என்பதை தெரிந்து கொண்டு பண்ணைகளை அமைத்தார்கள். ஆந்திர மாநிலம் கோதாவரியில் இருந்து ‘டைகர்’ எனப்படும் இறாலை கொண்டு வந்து மரக்காணத்தில் உள்ள பொறிப்பகத்தில் இனப்பெருக்கம் செய்து, பிறகு பண்ணையில் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். மரக்காணத்தில் உள்ள பொறிப்பகத்தில் இருந்து தென்மாநிலத்தில் உள்ள இறால் பண்ணைகளுக்கு இறால் குஞ்சுகள் அனுப்பப்படுகின்றன. 

வளத்தை அழித்த இறால் பண்ணைகள்....


இதுகுறித்து கவலையோடு பேசிய அப்பகுதிவாசி சரிவேஷ்குமார் என்ற இளைஞர், “கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உப்பு நீர்தான் கிடைக்கும் என்பதற்கு விதிவிலக்காக மரக்காணத்தில் முப்போகம் நெல் விளையக் கூடிய சுத்தமான நிலத்தடி நீர் இருந்தது. இறால் பண்ணைகளால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் ரசாயனம் கலந்த உப்பு நீர்தான் கிடைக்கிறது.  ஒவ்வொரு பண்ணையும் நாளொன்றுக்கு 2 லட்சம் கரிப்பு நிறைந்த ரசாயன தண்ணீரை கடலிலும், நிலத்திலும் திறந்துவிடுவதால் மணல் சூழந்த இப்பகுதி, ரசாயன நீரை முழுவதுமாக உறிஞ்சி நிலத்தடி நீர் முழுவதும் நஞ்சாகியுள்ளது.
கடலில் கலக்கும் ரசாயன நீரால், கரையோரத்தில் கிடைக்கக் கூடிய சிறிய மீன்கள் அழிந்துவருகின்றன. தூத்துக்குடிக்கு அடுத்ததாக அதிக உப்பளங்கள் மரக்காணத்தில் உள்ளது. இறால் பண்ணைகள் திறந்துவிட்ட நீர் உப்பளங்களிலும் கலந்துவிடுவதால், தயாரிக்கப்படும் உப்பும் மாசடைந்துதான் காணப்படுகிறது. இப்படி தனிமனிதர்களின் வாழ்வுக்காக ஒரு நகரமும் இயற்கை வளங்களும் கொள்ளை போய்க்கொண்டிருப்பதை கண்ணீரோடு தடுக்க வழியின்றி தவித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் வேதனையான குரலில். 

ஆக்கிரமிப்பு பண்ணைகள்...


இங்குள்ள பெரும்பாலான இறால் பண்ணைகள் ஏரி, குளம் போன்ற இடங்களில்தான் இயங்குகின்றன. வன அதிகாரிகளின் அனுமதியின்றி ஒருவர் கூட செல்ல முடியாத அளவிற்கு கெடுபிடியுடன் இயங்குகிறது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை கூட விட்டுவைக்காமல், 3000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இறால் பண்ணை நடத்தி லாபம் கொழிக்கிறார்கள். வனப்பகுதியில் ஆங்கலேயர்கள் காலத்தில் வைக்கப்பட்ட அரிய மரங்கள் கரிப்பு நீரால் பட்டு போய் காட்சியளிக்கிறது.
நல்லது வெளியே... கெட்டது உள்ளே...
    
மரக்காணத்தின் வளத்தை அழித்து இறால் வளர்க்கப்பட்டாலும், உள்ளூர் மக்களுக்கு நல்ல இறால்  எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான இறால்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நோய் தாக்கிய இரண்டாம் தர இறால்களை மட்டுமே உள்ளூர் மக்களுக்கு விற்பனை செய்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அழுகிய இறால்களை அப்புறப்படுத்தாமல் நிலத்திலேயே கொட்டிவிடுவதால் இயற்கை சூழலை தேடிவரும் அரிய வெளிநாட்டு பறவைகள் அவற்றை தின்று இறக்க நேரிடுகிறது.  இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தும் இந்த பண்ணைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள். அதிகாரிகளுக்கு இயற்கை வளத்தை விட தங்கள் வளம் முக்கியமாகிவிட்டது.

இயற்கை வளத்தை காப்பதன் மூலம்தான் மனிதவளத்தை நிலைநிறுத்திக்கொள்ளமுடியும் என்பதுதான் சூழலியல் அறிவியலின் தத்துவம். அரசு விழித்துக்கொள்ளை வேண்டும் விரைவாக! 

-ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்

No comments: